Thursday, August 20, 2009

தமிழ்ப்பட உலகின் முதல் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி

தமிழ்ப்பட உலகின் முதல் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி
 
தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கியவர் டி.ஆர்.ராஜகுமாரி. அவர் நடிகையானது சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சியாகும்.
 
தஞ்சையைச் சேர்ந்த கலைக்குடும்பம் ஒன்றில் 1922_ல் பிறந்தவர், டி.ஆர்.ராஜகுமாரி. தாயார் பெயர் ரங்கநாயகி.ராஜகுமாரியின் இயற்பெயர் ராஜாயி. பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருந்தாலும் கறுப்பு நிறம்.
 
ராஜகுமாரியின் அத்தை எஸ்.பி.எல்.தனலட்சுமி, சினிமாவில் நடித்து வந்தார். 1940_ல் நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நடித்த "காளமேகம்" படத்தில் கதாநாயகியாக நடிக்க எஸ்.பி.எல்.தனலட்சுமி ஒப்பந்தமானார். அவர் சென்னைக்கு படப்பிடிப்புக்காகப் புறப்பட்டுச் சென்றபோது, ராஜகுமாரியும் உடன் சென்றார்.
 
சென்னையில் தங்கியிருந்த எஸ்.பி.எல்.தனலட்சுமியை, ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்காக பிரபல டைரக்டர் கே.சுப்பிரமணியம் வந்திருந்தார். எம்.கே.தியாகராஜ பாகவதரையும், எம்.எஸ். சுப்புலட்சுமியையும் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்.
 
தனலட்சுமியுடன் சுப்பிரமணியம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெண், காபி கொண்டு வந்து கொடுத்தாள். கறுப்பு நிறம். "வேலைக்காரியோ" என்று நினைக்கத்தக்க உருவம்.
 
சுப்பிரமணியத்தின் கேமரா கண்கள் அந்தப் பெண்ணை எடை போட்டன. கறுப்பாக இருந்தாலும், கேமரா கோணங்களில் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் இப்பெண் தோன்றுவாள் என்று நினைத்தார், சுப்பிரமணியம்.
 
"யார் இந்தப் பெண்?" என்று விசாரித்தார். "என் சொந்தக்காரப் பெண். எனக்கு உதவியாக வந்திருக்கிறாள்" என்றார், தனலட்சுமி. "நாளைக்கு இவளை ஸ்டியோவுக்கு அழைத்து வாருங்கள். மேக்கப் டெஸ்ட் போட்டுப் பார்ப்போம்" என்று கூறிவிட்டுச் சென்றார், சுப்பிரமணியம்.
 
மறுநாள் சுப்பிரமணியத்தின் ஸ்டூடியோவுக்குச் சென்றார், ராஜகுமாரி. சுப்பிரமணியம், அன்றைய புகழ் பெற்ற மேக்கப்மேன் ஹரிபாபாபுவுக்கு டெலிபோன் செய்தார். "ஒரு பெண்ணை அனுப்புகிறேன். மேக்கப் போட்டு அனுப்புங்கள்" என்றார்.
 
மேக்கப் போடுவதற்குத் தயாராகக் காத்திருந்தார், ஹரிபாபு. கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பெண்ணைப் பார்த்து மிரண்டு போனார்.
 
"யாரம்மா நீ?" என்று விசாரித்தார்.
 
"என் பெயர் ராஜாயி. மேக்கப் டெஸ்டுக்காக டைரக்டர் சுப்பிரமணியம் சார் என்னை அனுப்பியிருக்கிறார்."
 
பெண் கூறிய பதிலைக் கேட்டதும், ஹரிபாபுவுக்கு மயக்கமே வரும் போலிருந்தது.
 
"நிறமோ கறுப்பு! பெயரோ ராஜாயி. இவளுக்கா மேக்கப் டெஸ்ட்? சுப்பிரமணியத்துக்குப் பைத்தியம் பிடித்து விட்டது" என்று சத்தம் போட்டு கூறியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மூச்சு வாங்க சுப்பிரமணியத்தின் அறைக்குப் போனார். "நிஜமாகவே இந்தப் பெண்ணுக்கு மேக்கப் போடச் சொல்கிறீர்களா?" என்று கேட்டார்.
 
"அந்தப் பெண் கறுப்பாக இருந்தாலும், கேமரா கோணங்களுக்குப் பொருத்தமாக இருப்பாள். சீக்கிரம் போய் மேக்கப் போட்டு அனுப்புங்கள்" என்றார், சுப்பிரமணியம்.
 
ஹரிபாபு அரை மனதுடன் ராஜகுமாரிக்கு மேக்கப் போட்டு அனுப்பினார்.
 
ராஜகுமாரியை பல்வேறு `போஸ்'களில் படம் எடுத்தார், சுப்பிரமணியம். படங்கள் பிரிண்ட் போட்டு வந்ததும், சுப்பிரமணியத்துக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை. எதிர்பார்த்ததற்கு மேலாகவே அழகாகத் தோன்றினார், ராஜகுமாரி.
 
"என் படத்தில் நீ நடிக்கிறாய்" என்று சுப்பிரமணியம் சொன்னார். அதைக் கேட்டு மகிழ்ந்த ராஜகுமாரி, ஏதோ ஒரு தோழி வேடம் தனக்குக் கிடைக்கப் போகிறது என்று நினைத்தார்.
 
"நான் கச்ச தேவயானி என்ற படம் தயாரிக்கிறேன். அதில் நீதான் கதாநாயகி" என்று சுப்பிரமணியம் கூறினார். தான் காண்பதெல்லாம் உண்மையா, அல்லது கனவா என்ற சந்தேகம் ராஜகுமாரிக்கு.
 
தன் கண் எதிரே இருந்த புகைப்படங்களைப் பார்த்தார். மேக்கப் போட்ட பிறகு, தன் தோற்றம் அடியோடு மாறி, கவர்ச்சிக் கன்னியாகத் தோன்றுவதைக் கண்டார். சுப்பிரமணியம் உண்மையாகவே தனக்குக் கதாநாயகி வேடம் கொடுக்க முடிவு செய்து விட்டார் என்பதை உணர்ந்து கொண்டார்.
 
சுப்பிரமணியம், சுப்பிரமணியக் கடவுளாகவே தோன்றினார், ராஜகுமாரிக்கு. அவர் காலில் விழுந்து வணங்கினார். "இனி உனக்கு நல்ல காலம்தான். விரைவில் பிரபல நடிகையாக வருவாய்" என்று சுப்பிரமணியம் வாழ்த்தினார். `ராஜாயி' 

No comments:

Post a Comment