Thursday, August 20, 2009

28 வயதில் கிட்டப்பா மரணம் சுந்தராம்பாள் துறவுக்கோலம் பூண்டார்

28 வயதில் கிட்டப்பா மரணம் சுந்தராம்பாள் துறவுக்கோலம் பூண்டார்
 
தமிழ் நாடக உலகில் ஈடு இணையற்ற நடிகராக _ பாடகராகத் திகழ்ந்த கிட்டப்பா, தமது 28_வது வயதில் மரணம் அடைந்தார். 25 வயதில் விதவையான கே.பி. சுந்தராம்பாள் துறவுக்கோலம் பூண்டார்.
 
கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் பிரிந்து வாழ்ந்த காலத்தில் கிட்டப்பாவுக்கு சுந்தராம்பாள் எழுதிய பல கடிதங்களில் "உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். அதற்குக் காரணம் உண்டு.
 
கிட்டப்பாவுக்கு மதுப்பழக்கம் உண்டு. குடும்பச் சூழ்நிலை காரணமாக குடிப்பழக்கம் அதிகமாகி, மதுவுக்கு அடிமையானார்.சிகிச்சை அளித்த டாக்டர், "உங்கள் குடல் வெந்து போயிருக்கிறது. ஈரல் சுருங்கி போய்விட்டது. இனி குடித்தால் உயிருக்கு ஆபத்து" என்று எச்சரித்தும், குடியை கிட்டப்பா நிறுத்தவில்லை.
 
1933_ம் ஆண்டு திருவாரூரில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது மயக்கம் போட்டு விழுந்தார். பிறகு குணம் அடைந்தாலும், படுத்த படுக்கையானார். 1933_ம் ஆண்டு டிசம்பர் 2_ந்தேதி பிற்பகல் கிட்டப்பா காலமானார். இறந்தபோது அவருக்கு 28 வயது. சுந்தராம்பாளுக்கு 25 வயது.
 
கிட்டப்பா இறந்த செய்தியை சுந்தராம்பாளுக்குத் தாமதமாகவே தெரிவித்தார்கள். தகவல் தெரிந்ததும் கதறி அழுது கொண்டே விரைந்தோடினார். ஆனால் பிற்பகல் 3 மணிக்கு இறந்த கிட்டப்பாவின் உடலை 6 மணிக்கு தகனம் செய்துவிட்டனர்.
 
ஆயினும் சுந்தராம்பாள், கிட்டப்பாவின் அஸ்தி கலசத்தைப் பெற்று, காசிக்குச் சென்று திரிவேணி சங்கமத்தில் கரைத்தார்.
 
கிட்டப்பா, சுந்தராம்பாளைப் பிரிந்து வாழ்ந்தபோதிலும், அவர் மீது சுந்தராம்பாள் கொண்டிருந்த அன்பு அளவு கடந்தது.கிட்டப்பா இறந்ததும், சுந்தராம்பாள் வெள்ளை ஆடை உடுத்தி துறவுக்கோலம் பூண்டார். நாடகங்களில் நடிக்க மறுத்தார்.
 
சுந்தராம்பாள் பாடலைக் கேட்டு இதயத்தை பறி கொடுத்தவர்கள், அவர் பாடாமலும், நடிக்காமலும் இருந்ததைக் கண்டு கவலை அடைந்தார்கள். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி உள்பட பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, "ஆண்களுடன் சேர்ந்து நடிப்பதில்லை" என்று உறுதி எடுத்துக் கொண்டு "நந்தனார்" நாடகத்தில் நந்தனாராக நடித்தார்.
 
இந்தக் காலக்கட்டத்தில், தமிழில் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியிருந்தன. சினிமாவில் நடிப்பதற்கு வந்த அழைப்புகளை சுந்தராம்பாள் ஏற்கவில்லை.

No comments:

Post a Comment