Thursday, August 20, 2009

கிட்டப்பா _ கே.பி.சுந்தராம்பாள் காதல் திருமணம்

கிட்டப்பா _ கே.பி.சுந்தராம்பாள் காதல் திருமணம்
 
நாடகங்களில் இணைந்து நடித்ததால், கிட்டப்பாவுக்கும், சுந்தராம்பாளுக்கும் காதல் மலர்ந்தது. கிட்டப்பா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது, சுந்தராம்பாளுக்குத் தெரியும். எனினும், "கடைசி வரை உன்னை காப்பாற்றுவேன்" என்று கிட்டப்பா வாக்குறுதி அளித்ததால், அவரை மணக்க சம்மதித்தார், சுந்தராம்பாள்.
 
கிட்டப்பா _ சுந்தராம்பாள் காதல் பற்றி அறிந்த கிட்டப்பாவின் சகோதரர் அப்பாதுரை அய்யரும், சுந்த ராம்பாளின் மாமா மருக்கொழுந்துவும் கலந்து பேசி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
 
1927_ம் ஆண்டில் கிட்டப்பா _ சுந்தராம்பாள் திருமணம் மாயவரத்தில் எளிய முறையில் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களில் இறந்துவிட்டது. இதனால் பெரும் சோகத்திற்கு உள்ளான கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் சில மாதங்கள் நாடகங்களில் நடிக்காமல் இருந்தனர்.
 
கடைசி வரை காப்பாற்றுவதாக சுந்தராம்பாளுக்கு கிட்டப்பா வாக்குறுதி கொடுத்தார் என்றாலும், அதை நிறைவேற்றுவது சுலபமாக இல்லை. கிட்டப்பாவையும், சுந்தராம்பாளையும் பிரிக்க உறவினர்களும் விதியும் செய்த சதி, வெற்றி பெற்றது.
 
கிட்டப்பா, சுந்தராம்பாளைப் பிரிந்தார். இருவரும் பிரிய நேரிட்டதற்கு இன்னொரு காரணமும் அப்பொழுது கூறப்பட்டது. "கிருஷ்ணலீலா" என்ற நாடகத்துக்குப் போக வேண்டாம் என்று கிட்டப்பா கூறியதாகவும், அதை மீறி சுந்தராம்பாள் அந்த நாடகத்துக்குச் சென்றதால் கிட்டப்பா கோபம் அடைந்ததாகவும் பத்திரிகைகள் எழுதின.
 
பிரிந்து வாழ்ந்த கிட்டப்பாவுக்கு சுந்தராம்பாள் எழுதிய கடிதங்கள், கண்ணீர்க் காவியங்களாகத் திகழ்கின்றன. 24_8_1930_ல் கொடுமுடியில் இருந்து கிட்டப்பாவுக்கு சுந்தராம்பாள் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி வருமாறு:-
 
..... தங்களைப் பிரிந்திருப்பது எனக்கு எவ்வளவு பயமாக இருக்கிறது என்பது கடவுளுக்குத்தான் தெரியும். எவ்வளவு நல்ல வழியில் நடந்தாலும், நீங்கள் இல்லாததால் ஒவ்வொருவரும் "நீ என்ன இருந்தாலும் நாடகக்காரிதானே! அவர்தான் உன்னை விட்டுப் போய்விட்டாரே! நீ ஏன் இன்னும் அவரையே நினைத்திருக்க வேண்டும்" என்று சொல்லும் வார்த்தையானது, இனி நான் உலகில் இருந்து என்ன பயன் என்ற முடிவுக்குக் கொண்டுவந்து விடுகிறது.
 
நான் ஏன் உலகில் இருக்க வேண்டும். இறந்தால் நலம். என் அன்பார்ந்த பர்த்தாவாகிய நீங்கள் இருக்கும்போது, என்னை இம்மாதிரி உலகத்தார் பேசுவது முறையா _ கடவுளுக்குத் தான் கண் இல்லையா? கண்ணா! இம்மாதிரி எல்லாம் என்னை அபகீர்த்திக்கு ஆளாக்கவேண்டாம். நான் எந்த விதமான குற்றங்கள் செய்திருந்த போதிலும் என்னை மன்னிக்கவும். ஆனந்த சாகரத்தில் மூழ்கும் நாளை எதிர்பார்க்கிறேன்.
 
தங்கள் தேகத்தைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். அலட்சியமாக இருக்கவேண்டாம். உங்களை நம்பிக் கொண்டிருக்கும் என்னை கைவிட்டு விடாதீர்கள். சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுதவேண்டும்."
 
இவ்வாறு கல்லும் கரையும்படி சுந்தராம்பாள் எழுதிய கடிதங்கள் பல.

No comments:

Post a Comment