Thursday, August 20, 2009

"நந்தனார்" படத்தில் நடிக்க ரூ.1 லட்சம் பெற்றார், கே.பி.சுந்தராம்பாள்

"நந்தனார்" படத்தில் நடிக்க ரூ.1 லட்சம் பெற்றார், கே.பி.சுந்தராம்பாள்
 
கிட்டப்பா மறைவுக்குப்பிறகு நாடகங்களில் கூட நடிக்காமல் துறவியாக வாழ்ந்த கே.பி.சுந்தராம்பாளுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. "நந்தனார்" படத்தில் நடிப்பதற்கு அவர் ரூ.1 லட்சம் பெற்றார்.
 
வடநாட்டைச் சேர்ந்த அசன்தாஸ் என்ற பட அதிபர், நந்தனார் கதையை தமிழில் படமாகத் தயாரிக்க விரும்பினார்.கே.பி.சுந்தராம்பாளுக்கு இருந்த பெயரையும், புகழையும் அறிந்த அவர், கே.பி.சுந்தராம்பாளை நந்தனாராக (ஆண் வேடத்தில்) நடிக்க வைக்க விரும்பினார்.
 
அவர், காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியை அழைத்துக் கொண்டு சுந்தராம்பாள் வீட்டுக்குச் சென்றார். அப்போது சுந்தராம்பாள் வீட்டில் இல்லை. சுந்தராம்பாளின் தாய் மாமன்தான் இருந்தார்.
 
"நான் "நந்தனார்" கதையை சினிமா படமாகத் தயாரிக்கப்போகிறேன். அதில் சுந்தராம்பாள் நடிக்கவேண்டும்" என்று அசன்தாஸ் கேட்டுக் கொண்டார். "சுந்தராம்பாள் சினிமாவில் நடிக்க சம்மதிப்பது இல்லையே" என்றார், சுந்தராம்பாளின் தாய்மாமன்.
 
"சுந்தராம்பாள் நந்தனார் நாடகத்தில் நடித்தாரே! அதே வேடத்தில் சினிமாவில் நடிப்பதில் தவறு இல்லையே" என்று விடாப்பிடியாகக் கூறினார் அசன்தாஸ்.
 
பட அதிபரை விரட்ட என்ன வழி என்று யோசித்தார், சுந்தராம்பாளின் மாமன். ஒரு பெரிய தொகையைச் சொன்னால் அசன்தாஸ் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போய் விடுவார் என்று நினைத்த அவர், "ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கத் தயாரா?" சுந்தராம் பாளை நடிக்கச் சொல்லுகிறேன்" என்று ஒரு போடு போட்டார்.
 
அசன்தாஸ் அசரவில்லை. "ஒரு லட்சம் தானே! தாராளமாகத் தருகிறேன். இதோ அட்வான்ஸ்" என்று ரூ.25 ஆயிரத்துக்கு "செக்" எழுதிக் கொடுத்தார்.
 
சத்தியமூர்த்தியும், அசன்தாசும் போய் சிறிது நேரத்துக்குப்பின், சுந்தராம்பாள் வந்து சேர்ந்தார். நடந்ததையெல்லாம் அவரிடம் மாமன் சொன்னார். சுந்தராம்பாள் யோசித்தார். அட்வான்ஸ் வாங்கிய பிறகு மறுப்பது சரியல்ல; அத்துடன் நாடகத்தில் நடித்த அதே வேடத்தில் நடிப்பது தவறு இல்லை என்று எண்ணினார். நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.
 
அக்காலத்தில் ஒரு லட்ச ரூபாய் இருந்தால் முழுப்படத்தையும் தயாரித்து விடலாம். ஒரு பவுன் விலை 13 ரூபாய் தான். அப்படியிருக்க சுந்தராம்பாளுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்ட செய்தி பத்திரிகைகளில் பெரிய தலைப்புடன் பிரசுரிக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
 
இந்தப் படத்தை எம்.எல்.டாண்டன் டைரக்ட் செய்தார். துணை இயக்குனர், பிற்காலத்தில் டைரக்ஷனில் பெரும் சாதனைகள் புரிந்த எல்லீஸ் ஆர்.டங்கன். படப்பிடிப்பு கல்கத்தாவில் நடந்தது. சங்கீத வித்வான் மகாராஜபுரம் விசுவநாத அய்யர், வேதியராக நடித்தார். அவருடைய சம்பளம் 3 ஆயிரம்.
 
படத்துக்கு 3 லட்ச ரூபாய் செலவிட்டார், அசன்தாஸ். மூன்று மாத காலம் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. படத்தில் மொத்தம் 41 பாடல்கள் இடம் பெற்று இருந்தன. அதில் சுந்தராம்பாள் பாடியவை 19.
 
சுந்தராம்பாளின் பாடல்கள் அருமையாக அமைந்தபோதிலும், படம் சுமாராகவே ஓடியது. "படம் நன்றாக இல்லை" என்பதே பத்திரிகைகளின் பொதுவான விமர்சனம்.
 
இதில் வருந்தத்தக்க செய்தி என்ன வென்றால், 1936 நவம்பரில் கல்கத்தா நியூ தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில், இந்தப் படத்தின் நெகட்டிவ் எரிந்து போயிற்று.
 
ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு கேட்டு, ஸ்டூடியோ மீது அசன்தாஸ் வழக்குத் தொடர்ந்தார். அவர்கள் 9 ஆயிரம் தான் தர முடியும் என்று கூறி, அந்தத் தொகையை கோர்ட்டில் கட்டினார்கள்.
 
அடுத்து கே.பி.எஸ். நடித்த திரைப்படம் "மணிமேகலை". மாதவியின் மகளாகப் பிறந்து, துறவியாக வாழ்ந்த மணிமேகலை வேடத்தில் சுந்தராம்பாளும், உதய குமாரனாக கொத்தமங்கலம் சீனுவும் நடித்தனர். இப்படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் _ டிஏ.மதுரம் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
 
இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது. சுந்தராம்பாள் இப்படத்தில், "சிறைச்சாலை என்ன செய்யும்?" என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் மிகப்பிரபலமாகி, காங்கிரஸ் மேடைகளில் எல்லாம் பாடப்பட்டது.
 
இதன்பிறகு சுந்தராம்பாள் நீண்ட காலம் படங்களில் நடிக்கவில்லை. மேடைக்கச்சேரிகள் மட்டும் நடத்தி வந்தார்

No comments:

Post a Comment