எஸ்.எஸ்.வாசன் எழுதிய நாவல் "சதிலீலாவதி" திரைப்படம் ஆகியது எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம்
1936_ல் வெளிவந்த "சதிலீலாவதி", தமிழ்த் திரை உலகில் முக்கியத்துவம் பெற்ற படமாகும். பிற்காலத்தில், ஜெமினி ஸ்டூடியோவை அமைத்து பிரமாண்டமான படங்களைத் தயாரித்து, இந்தியாவை பிரமிப்பில் ஆழ்த்திய எஸ்.எஸ்.வாசன் எழுதிய கதை.
திரை உலகில் வசூல் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்து, தமிழக முதல்_அமைச்சராக 10 ஆண்டுகள் ஆட்சி நடத்திய எம்.ஜி.ஆர். இந்தப் படத்தின் மூலம்தான் பட உலகுக்கு அறிமுகம் ஆனார்.
படத்தின் கதாநாயகன் பெயர் கிருஷ்ணமூர்த்தி. மிகவும் நல்லவன். தன் மனைவி லீலாவதியுடனும், மகள் லட்சுமியுடனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறான்.
அவர்கள் வாழ்க்கையில் ராமநாதன் (வில்லன்) குறுக்கிடுகிறான். அவனுடன் பழகுவதால் கிருஷ்ணமூர்த்திக்கு குடிப் பழக்கம் ஏற்படுகிறது.
பரசுராமன் நல்ல நண்பன். கிருஷ்ணமூர்த்தியை திருத்துவதற்கு எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
ராமநாதன் செய்த சூழ்ச்சியால் தன் மனைவி மீதும் பரசுராமன் மீதும் கிருஷ்ணமூர்த்திக்கு சந்தேகம் ஏற்படுகிறது. பரசுராமனை கொல்ல எண்ணி, அவனை கிருஷ்ணமூர்த்தி விரட்டிச் செல்கிறான். அப்போது பரசுராமனைப்போல் ஒருவனுக்கு உடை அணிவித்து, அந்த வழியே அனுப்புகிறான், வில்லன் ராமநாதன்.
ஓடி வரும்போது, கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுகிறான். போலி பரசுராமனை ராமநாதனே சுட்டுவிட்டு, பழியை கிருஷ்ணமூர்த்தி மீது போட்டுவிடுகிறான். பயந்து போன கிருஷ்ணமூர்த்தி, இலங்கைக்கு தப்பிச்செல்கிறான். அங்கு அவனுக்கு புதையல் கிடைக்கிறது. உண்மை பரசுராமன், அவனை சந்திக்கிறான். இருவரும் மாறுவேடத்தில், தாயகம் திரும்புகிறார்கள். தனியாக இருக்கும் லீலாவதியை கெடுக்க முயலும் ராமநாதன் போலீசாரிடம் பிடிபடுகிறான்.
உண்மை வெளிப்படுகிறது. பிரிந்தவர்கள் ஒன்று சேருகிறார்கள்.
இதில் எம்.கே.ராதா, கதாநாயகன் கிருஷ்ணமூர்த்தியாக நடித்தார். எம்.ஆர்.ஞானாம்பாள், கதாநாயகி லீலாவதி வேடம் ஏற்றார்.
வில்லன் ராமநாதனுக்கு நண்பனாக வரும் போலீஸ் அதிகாரி ரங்கய்ய நாயுடுவாக எம்.ஜி.ஆர். நடித்தார்.என்.எஸ்.கிருஷ்ணனுக்கு இது இரண்டாவது படம். அப்போது மதுரம் ஜோடி சேரவில்லை.
இப்படத்தில் கதாநாயகன் _ கதாநாயகியாக நடித்த எம்.கே. ராதாவும் ஞானாம்பாளும் வாழ்க்கையிலும் இணைந்தார்கள்.
இந்தப் படத்துக்கான வசனங்களை எம்.கே.ராதாவின் தந்தை எம்.கந்தசாமி முதலியார் எழுதியிருந்தார். பாடல்கள் டி.கே.சுந்தரவாத்தியார். டைரக்ஷன் எல்லிஸ்.ஆர்.டங்கன்.
"தேயிலை தோட்டத்திலே பாரத சேய்கள் சென்று மாய்கிறார்" என்ற பாடலும், "ராட்டினமே _ கதர் பூட்டினமே", "அதிக சினமேன் அன்புள்ள நைனா" என்ற பாடல்கள் பிரபலமாயின.
இதே கால கட்டத்தில், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரின் "பதிபக்தி" என்ற நாடகம், சினிமாவாக வந்தது. இதன் கதாநாயகன், நாடக உலகில் பிரபலமாக விளங்கிய கே.பி. கேசவன்.
மற்றும் காளி என்.ரத்தினம், கே.கே.பெருமாள், கே.பி. காமாட்சி, எம்.எம்.ராதாபாய், கே.வி.ஜானகி முதலியோர் நடித்தனர்.இதன் கதையை பாவலர் என் பவர் எழுதியிருந்தார். பி.ஒய். அல்டேகர் என்பவர் டைரக்ட் செய்திருந்தார்.
"சதிலீலாவதி" கதையும், "பதிபக்தி" கதையும் ஒரே மாதிரி இருந்ததால், எது ஒரிஜினல் கதை என்று சர்ச்சை எழுந்தது.இரண்டுமே ஆங்கில நாவலின் தழுவல் என்று சில பத்திரிகைகள் எழுதின. இதில் ஒரு ஆச்சரியமான விஷயம், "சதிலீலாவதி", "பதிபக்தி" ஆகிய இரண்டு படங்களுமே நன்றாக ஓடின!



No comments:
Post a Comment