Thursday, August 20, 2009

தமிழ்ப்பட உலகின் தந்தை கே.சுப்பிரமணியம்

தமிழ்ப்பட உலகின் தந்தை கே.சுப்பிரமணியம்

 
தமிழ்ப்பட உலகின் தந்தை கே.சுப்பிரமணியம் பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரியை அறிமுகப்படுத்தியவர்.
 
"காளிதாஸ்" படம் வெளிவந்தபின், வரிசையாகப் படங்கள் வரத்தொடங்கின. தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் கட்டப்பட்டன. புகழ் பெற்ற நாடகங்களையெல்லாம் சினிமாவாகத் தயாரிக்கத் தொடங்கினார்கள். அவை பெரும்பாலும் புராணக்கதைகள்.
 
சினிமா என்பது சக்தி வாய்ந்த சாதனம். புகழும், பணமும் ஒருங்கே வரக்கூடிய துறை. எனவே, படத்தயாரிப்பில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம், படித்த இளைஞர்கள் சிலருக்கும் ஏற்பட்டது. அப்படி படத்தொழில் மீது ஆர்வம் கொண்டவர்களில் கே.சுப்பிரமணியமும் ஒருவர்.
 
தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் 1904_ம் ஆண்டு ஏப்ரல் 20_ந் தேதி கே.சுப்பிரமணியம் பிறந்தார். தந்தை சி.எஸ்.கிருஷ்ணசுவாமி அய்யர். தாயார் வெங்கலட்சுமி அம்மாள்.
 
கிருஷ்ணசாமி அய்யர் பெரும் செல்வந்தர். நிலக்கிழார். எனவே, மகன் உயர் கல்வி கற்று வக்கீலாக வேண்டும் என்று விரும்பினார். அதன்படி சுப்பிரமணியம் கும்பகோணத்தில் "பி.ஏ" தேறிய பின் சென்னையில் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து "பி.எல்" பட்டம் பெற்றார்.
 
இந்தக் காலக்கட்டத்தில்தான் ஊமைப்படங்கள் வரத்தொடங்கின. அவற்றைப் பார்த்த சுப்பிரமணியத்துக்கு, சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. எனினும் தந்தையின் விருப்பப்படி, சொந்த ஊருக்குச் சென்று வக்கீல் தொழிலில் ஈடுபட்டார்.
 
இருப்பினும், ஆங்கிலப்படங்கள், தமிழ்ப்படங்கள், இந்திப் படங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து பார்த்து வந்தார். ஆர்வம் அதிகமாகியது. திரைப்பட உலகில் ஈடுபட முடிவு செய்தார்.
 
இந்தக் காலக்கட்டத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழர் ராஜா சாண்டோ, பம்பாயில் நடிகராகவும், டைரக்டராகவும் புகழ் பெற்று விளங்கினார். ஊமைப்பட காலத்தில் இருந்து சினிமாவின் சகல துறைகளிலும் பயிற்சி பெற்று, அனுபவம் பெற்றவர்.
 
தமிழ்ப்படங்களை டைரக்ட் செய்வதற்காக அவர் சென்னைக்கு வந்தார். ராஜா சாண்டோவிடமும், ஆர்.பத்மநாபன் என்ற இன்னொரு டைரக்டரிடமும் கே.சுப்பிரமணியம் டைரக்ஷன் துறையில் நேரடிப் பயிற்சி பெற்றார்.
 
வக்கீல் வேலைக்குப் படித்து பட்டம் பெற்ற சுப்பிரமணியம், திரைப்படத் துறையில் நுழைந்தது அவருடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பெரும் திகைப்பை அளித்தது. "வேண்டாம், விஷப்பரீட்சை" என்று எச்சரித்தவர்களும் உண்டு.
 
காரைக்குடியைச் சேர்ந்த ஏ.எல்.ஆர்.எம். அழகப்ப செட்டியாரும், "மானகிரி லேனா" என்று அழைக்கப்பட்ட லெட்சுமணன் செட்டியாரும், சினிமா படம் தயாரிக்க முடிவு செய்தனர். (பிற்காலத்தில், எம்.ஜி.ஆர்., பானுமதி, பத்மினி ஆகியோர் நடித்த "மதுரை வீரன்" படத்தை தயாரித்தவர் மானகிரி லேனாதான்)
 
அந்தக் காலத்தில், நாடகங்களில் பெரும்பாலும் சிறுவர்களே நடிப்பார்கள். அழகான சிறுவனுக்குப் பெண் வேடம் கிடைக்கும்! இந்த நாடக் குழுக்கள் "பாய்ஸ் கம்பெனி" என்று அழைக்கப்பட்டன. இந்தக் கம்பெனியில் நடிக்கும் சிறுவர்கள், நடிப்பையே முழு நேரத்தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் ஊர் ஊராகச் சென்று மாதக்கணக்கில் முகாமிட்டு நாடகங்கள் நடத்துவார்கள். (எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா, எம்.கே.ராதா ஆகியோர் எல்லாம் பாய்ஸ் கம்பெனிகளில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான்).
 
கம்பெனிகளில் இல்லாத பிரபல நடிகர் நடிகைகள், குறிப்பிட்ட ஊரில் ஒரே நாள் நாடகம் நடத்துவார்கள். அதற்கு "ஸ்பெஷல் நாடகம்" என்று பெயர்.
 
காரைக்குடியில் நடந்த "பவளக்கொடி" என்ற ஸ்பெஷல் நாடகத்தை, அழகப்பசெட்டியாரும், மானகிரி லேனாவும் பார்த்தார்கள். கதாநாயகன் அர்ஜூனனாக நடித்த இளைஞர் அழகாக இருந்தார்; இனிய குரலில் பாடினார். கதாநாயகி பவளக்கொடியாக நடித்த இளம் நடிகை, கணீர் கணீர் என்று வசனம் பேசி சிறப்பாக நடித்தார்.
 
அந்த நாடகத்தை கே. சுப்பிரமணியம் டைரக்ஷனில் படமாகத் தயாரிப்பது என்று மானகிரிலேனாவும், அழகப்பச்செட்டியாரும் முடிவு செய்தார்கள். சுப்பிரமணியமும் நாடகத்தைப் பார்த்து விட்டு "ஓகே" சொன்னார்.
 
நாடகத்தில் அர்ஜூனனாக நடித்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். பிற்காலத்தில் தமிழ்ப்பட உலகின் முடி சூடா மன்னராக விளங்கியவர். பவளக்கொடியாக நடித்தவர் எஸ்.டி.சுப்புலட்சுமி. பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றதுடன், பிற்காலத்தில் கே.சுப்பிரமணியத்தின் வாழ்க்கைத் துணைவியானவர். பாகவதரையும், எஸ்.டி. சுப்புலட்சுமியையும் மானகிரி லேனாவும், அழகப்பசெட்டியாரும் அழைத்துப் பேசி, படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
 
அக்காலத்தில், தமிழ்ப் படங்களும், பிற மொழிப் படங்களும் பெரும்பாலும் பம்பாய், புனா, கல்கத்தா ஆகிய நகரங்களில்தான் தயாரிக்கப்பட்டன. டைரக்டர் கே.சுப்பிரமணியம், "பவளக் கொடி"யின் படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடிவு செய்தார். அடையாறில் இருந்த "மீனாட்சி சினிடோன்" ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கியது.
 
(இந்த ஸ்டூடியோ, "சுந்தரம் சவுண்ட் ஸ்டூ டியோ", "நெப்டிžன் ஸ்டூடியோ" என்றெல்லாம் பெயர் மாறி, கடைசியில் எம்.ஜி.ஆர். கைக்கு வந்து, "சத்யா ஸ்டூடியோ"வாக பல ஆண்டுகள் இயங்கி வந்தது. இப்போது, "எம்.ஜி.ஆர் _ ஜானகி மகளிர் கல்லூரி"யாக மாறியுள்ளது.)
 
பவளக்கொடி, 1934_ம் ஆண்டு வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்றது. ஒரே படத்தில் தியாகராஜபாகவதர் "சூப்பர் ஸ்டார்" ஆனார். எஸ்.டி.சுப்புலட்சுமியின் அழகும், வசன உச்சரிப்பும் எல்லோரையும் கவர்ந்தது. பவளக்கொடியில் மொத்தம் 55 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை பாகவதரால் பாடப்பட்டவை.
 
"பவளக்கொடி" படத்தில் நடித்ததற்காக பாகவதருக்கு ஆயிரம் ரூபாயும், எஸ்.டி.சுப்பு லட்சுமிக்கு 2 ஆயிரம் ரூபாயும் ஊதியமாகத் தரப்பட்டது! டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் சம்பளம் 700 ரூபாய்தான்! சுப்பிரமணியம் அடுத்து டைரக்ட் செய்த படம் முருகன் டாக்கீசாரின் "நவீன சாரங்க தரா." இதிலும் பாகவதரும், எஸ். டி.சுப்புலட்சுமியும் ஜோடியாக நடித்தனர்.
 
"சாரங்கதரா" என்பது புராணக்கதை. சித்ராங்கி என்ற அழகிய இளவரசிக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அக்கால வழக்கப்படி, பல தேச இளவரசர்களின் படங்கள் அவளுக்குக் காட்டப்படுகின்றன. சாரங்கதரன் என்ற இளவரசன் படத்தைக் கண்டு மயங்கிய சித்ராங்கி, அவனையே மணக்க விரும்புகிறாள்.
 
சாரங்கதரனின் தந்தையான கிழட்டு மன்னன், சித்ராங்கி மீது மோகம் கொள்கிறான். சாரங்கதரன் ஊரில் இல்லாததால், அவனுடைய வீரவாளுக்கு பதிலாக, தன்னுடைய வாளை சித்ராங்கிக்கு அனுப்பி வைக்கிறான். அதற்கு சித்ராங்கி மாலையிடுகிறாள்.
 
தன் அரண்மனைக்கு வந்த சித்ராங்கியிடம், "நான்தான் உன் கணவன். நீ அணிவித்த மாலை என் வாளுக்குத்தான்" என்று கூறுகிறான், கிழட்டு ராஜா. திடுக்கிட்ட சித்ராங்கி, "நான் விரதம் இருக்கிறேன். அது முடியும் வரை இல்லறத்தில் ஈடுபட முடியாது" என்று கூறி தப்பித்துக் கொள்கிறாள்.இதன்பின், சாரங்கதரன் பறக்கவிடும் புறா, சித்ராங்கியிடம் போய்விடுகிறது. அதை கேட்கப் போகும் சாரங்கதரனிடம், "நீங்கள்தான் என் கணவர். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கெஞ்சுகிறாள், சித்ராங்கி. "இல்லை. நீங்கள் என் சிற்றன்னை" என்று மறுத்து விடுகிறான், சாரங்கதரன்.
 
இந்த சமயத்தில், அங்கே மன்னன் வந்து விடுகிறான். சாரங்கதரன் தன்னை ஏற்றுக்கொள்ளாததால், அவன் மீது பழி சுமத்துகிறாள், சித்ராங்கி.
 
சாரங்கதரனின் ஒரு கை, ஒரு காலை வெட்டும்படி கிழ மன்னன் கட்டளையிட, அந்த தண்டனை நிறைவேற்றப்படுகிறது. பிறகு கடவுள் அருளால், கை _ காலை திருப்பப் பெறுகிறான், சாரங்கதரன். சித்ராங்கி, தற்கொலை செய்து கொள்கிறாள்.
 
கே.சுப்பிரமணியம் டைரக்ஷனில், பாகவதர் சாரங்கதரனாகவும், எஸ்.டி.சுப்புலட்சுமி சித்ராங்கியாகவும் நடிக்க "சாரங்கதரா" தயாராகிக் கொண்டிருந்தபோது, பம்பாயில் லோட்டஸ் பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனி அதே "சாரங்கதரா" கதையை படமாக எடுக்கத்தொடங்கியது. அதன் கதாநாயகன் கொத்தமங்கலம் சீனு.
 
இதனால், கே.சுப்பிரமணியம் "சாரங்கதரா" படத்தயாரிப்பை சிறிது காலம் நிறுத்தி வைத்தார். பம்பாயில் தயாரான "சாரங் கதரா" படம் ரிலீஸ் ஆகி, படு தோல்வி அடைந்தது.
 
பார்த்தார், கே.சுப்பிரமணியம். சாரங்கதரா கதையின் பிற்பகுதியை மாற்றினார். இதன்படி, சித்ராங்கி நல்லவள். அவளும், சாரங்கதரனும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து கிழட்டு ராஜா கோபம் கொண்டு, சாரங்கதரனின் ஒரு கையையும், காலையும் வெட்டும்படி கட்டளையிட, அது நிறைவேற்றப்படுகிறது.
 
இந்த சமயத்தில் ஒரு பெண் துறவி வந்து, சாரங்கதரனுக்கு கை_கால் வருமாறு செய்கிறார். கிழ மன்னன் திருந்துகிறான். சாரங்கதரன் _ சித்ராங்கி திருமணம் நடைபெறுகிறது. இந்த மாறுதலுடன், படத்தின் பெயரும் "நவீன சாரங்கதரா" என்று மாற்றப்பட்டது.
 
"நவீன சாரங்கதரா" படம் வெளிவந்து ஓகோ என்று ஓடியது. பாகவதர் பாடிய "சிவபெருமான் கிருபை வேண்டும்" என்ற பாடல், பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது. கல்கத்தாவைச் சேர்ந்த இந்து பாலா என்ற பாடகி, பெண் துறவியாகத் தோன்றி மீரா பஜன் பாடல்களை அருமையாகப் பாடினார்.
 
சுப்பிரமணியம், பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாகவதரை மட்டும் அல்ல, "இசைவாணி" எம்.எஸ்.சுப்பு லட்சுமி, "கனவுக்கன்னி" டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோரை அறிமுகப்படுத்தியவரும் கே.சுப்பிரமணியம்தான்.
 
அத்துடன், அந்தக்காலத்திலேயே புரட்சிகரமான கருத்துக்கள் கொண்ட "சேவாசதனம்", "தியாகபூமி" முதலிய படங்களை உருவாக்கியவரும் அவரே. எனவே "தமிழ்ப் பட உலகின் தந்தை" என்று போற்றப்படுகிறார்.

No comments:

Post a Comment