Thursday, August 20, 2009

திரைப்படத் துறையில் கே.சுப்பிரமணியம் நடத்திய புரட்சி!

திரைப்படத் துறையில் கே.சுப்பிரமணியம் நடத்திய புரட்சி!
 
பாகவதரை திரை உலகுக்கு அளித்த கே.சுப்பிரமணியம், "பவளக்கொடி", "நவீன சாரங்கதரா" ஆகிய படங்களை எடுத்து, "பக்த குசேலா" என்ற படத்தை தயாரித்தார்.
 
இதில், கிருஷ்ணன், குசேலரின் மனைவி ஆகிய இரு வேடங்களில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். எஸ்.டி.சுப்புலட்சுமியின் "முல்லைச் சிரிப்பு" அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றது. ஆண் வேடத்தில் கிருஷ்ணனாக அவர் அற்புதமாக நடித்தது, அனைவரையும் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. இப்படத்தில் குசேலராக நடித்தவர் பாடலாசிரியர் பாபநாசம் சிவன். 27 குழந்தைகள் பெற்று, வறுமையுடன் போராடிய ஏழை பிராமணர் வேடத்துக்கு அவர் மிகவும் பொருத்தமானவராக இருந்தார்.
 
சாதி வெறியை சாடும் சமூகசீர்திருத்த கதை ஒன்றை "பாலயோகினி" என்ற பெயரில் படமாக்க விரும்பினார், கே.சுப்பிரமணியம். வேலை இல்லாத் திண்டாட்ட பிரச்சினையையும் படம் பிடித்துக்காட்டக்கூடிய விதத்தில், கதை அமைந்திருந்தது.
 
இதில் ஒரு சிறுமியின் கதாபாத்திரம் முக்கியமானது. அந்த வேடத்தில் தன் தம்பி விசுவநாதனின் மகளான பேபி சரோஜாவை நடிக்க வைத்தார். படத்தில் விதவையாக, பிராமண விதவைப்பெண் ஒருவரையே நடிக்க வைத்தார்.
 
படம் பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக பேபி சரோஜா பெரும் புகழ் பெற்றார். அந்தக் காலத்தில் ஆங்கிலப் படங்களில் ஷெர்லி டெம்பிள் என்ற குழந்தை நட்சத்திரம், பிரமாதமாக நடித்து உலகப்புகழ் பெற்றிருந்தார். பேபி சரோஜா "இந்தியாவின் ஷெர்லி டெம்பிள்" என்று போற்றப்பட்டார்.
 
அது மட்டுமல்ல; அப்போது தமிழ்நாட்டில் பிறந்த பெண் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் "சரோஜா" என்று பெயர் சூட்டினார்கள்! பேபி சரோஜா இப்படத்தில் "கண்ணே பாப்பா... மிட்டாயி வாங்கி தருகிறேன் உனக்கே" என்ற பாடலைப் பாடினார். அக்காலத்தில் பட்டி தொடடி எங்கும் ஒலித்த பெரிய "ஹீட்" பாடல் இது.
 
பின்னர், "பாலயோகினி"யை தெலுங்கில் தயாரித்தார், சுப்பிரமணியம். தெலுங்கிலும் அப்படம் பெரிய வெற்றி. பேபி சரோஜா வேடத்தில், தெலுங்கில் சுப்பிரமணியம் அறிமுகம் செய்த ஒரு சிறுமி பிற்காலத் தமிழிலும், தெலுங்கிலும் பெரிய நட்சத்திரமாகப் புகழ் பெற்றார். அவர்தான் எஸ்.வரலட்சுமி!
 
படங்கள் மூலம் ஒருபுறம் பிரபலமாகிக் கொண்டிருந்த சுப்பிரமணியத்துக்கு, மறுபுறம் எதிர்ப்பும் வலுத்துக் கொண்டிருந்தது. பழமையில் ஊறிய சில வைதீக பிராமணர்கள், "சமூக சீர்திருத்தம் என்ற பெயரில், பிராமணர்களின் பழக்க வழக்கங்களைக் கண்டிக்கிறார்; வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய பிராமண விதவையை படத்தில் நடிக்க வைக்கிறார்" என்று சுப்பிரமணியத்தைக் கண்டித்தனர். தஞ்சாவூரில் சில பிராமணர்கள் கூடி, சுப்பிரமணியத்தை சாதிப்பிரஷ்டம் செய்வதாக (பிராமண குலத்தை விட்டு நீக்குவதாக) அறிவித்தனர்.
 
இதைப்பற்றி, சுப்பிரமணியம் கவலைப்படவில்லை. தன் லட்சியத்தில் உறுதியோடு இருந்தார். மதுரை முருகன் டாக்கீசாருக்காக, "உஷா கல்யாணம்" என்ற படத்தை தயாரித்தார், சுப்பிரமணியம். அது சிறிய கதை. எனவே, படமும் சிறிதாக இருந்தது.
 
காசு கொடுத்து ஆனந்தமாகப் படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு, 3 மணி நேரமாவது படம் ஓடவேண்டும். எனவே, என்.எஸ்.கிருஷ்ணன்_ டி.ஏ.மதுரத்தை வைத்து, "கிழட்டு மாப்பிள்ளை" என்ற நகைச்சுவை குறும் படத்தைத் தயாரித்து, உஷா கல்யாணத்துடன் சேர்ந்து வெளியிட்டார்.
 
"ஒன்றில் இரண்டு" என்று அழைக்கப்பட்ட இந்த முறையைப் பின்பற்றி, பின்னர் "வாயாடி_ போலி பாஞ்சாலி", "நவீன விக்கிரமாதித்தன், புத்திமான் பலவான்" என்று பல படங்கள் வெளிவந்தன. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "சௌ சௌ" என்ற படத்தில், மூன்று படங்கள் அடங்கியிருந்தன!
 
அக்காலத்தில், சென்னையில் வசதியான சினிமா ஸ்டூடியோக்கள் இல்லை. சுப்பிரமணியத்தின் படங்கள் பெரும்பாலும் கல்கத்தாவில்தான் தயாராகி வந்தன.
 
சென்னையில் சிறந்த ஸ்டூடியோ ஒன்றை அமைக்க சுப்பிரமணியம் விரும்பினார். சில தயாரிப்பாளர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு, மவுண்ட் ரோட்டில் (இன்றைய அண்ணா சாலையில்) அண்ணா மேம்பாலம் அருகே புதர்களும், மரங்களும் அடர்ந்து, காடு போல் காட்சி அளித்த "ஸ்பிரிங் கார்டன்ஸ்" என்ற இடத்தை வாங்கினார். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிகோலிய ராபர்ட் கிளைவ், அங்கிருந்த படிதான் ஆட்சி நடத்தியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
 
அந்த இடத்தை வாங்கிய சுப்பிரமணியம், "மோஷன் பிக்சர் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்" என்ற பெயரில் அங்கு திரைப்பட ஸ்டூடியோவை நிறுவினார். (இதுதான் பிற்காலத்தில் ஜெமினி ஸ்டூடியோ ஆகியது.)
 
தமது ஸ்டூடியோவில் வேலை பார்க்க, கல்கத்தா ஸ்டூடியோவில் பணியாற்றிக்கொண்டிருந்த திறமைமிக்க ஒளிப்பதிவாளர்கள் சைலன் போஸ், கமலாகோஷ், லேபரட்டரி நிபுணர் திரன்தாஸ் குப்தா, ஒலிப்பதிவாளர் சின்ஹா, மேக்கப் கலைஞர் ஹரிபாபு ஆகியோரை சென்னைக்கு அழைத்து வந்தார்.
 
சுப்பிரமணியம் தயாரித்த படங்களில் பணியாற்றிய இவர்கள், பிற்காலத்தில் அவரவர் துறைகளில் உச்சத்தைத் தொட்டனர். 1937_ம் ஆண்டு, சுப்பிரமணியத்துக்கு பொற்காலம் என்றே கூறலாம். ராயப்பேட்டையில் குடியிருந்து வந்த அவர், மைலாப்பூர் சாந்தோம் சர்ச்சுக்கு எதிரே 40 கிரவுண்டில் இடம் வாங்கி, பெரும் மாளிகை கட்டி குடியேறினார்.
 
சுப்பிரமணியத்துக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. திருமணமானபோது அவருக்கு வயது 16. மணமகள் மீனாட்சிக்கு வயது 9.
 
"பவளக்கொடி" படப்பிடிப்பின்போது சுப்பிரமணியத்துக்கும், எஸ்.டி.சுப்புலட்சுமிக்கும் ஆழ்ந்த அன்பு அரும்பியது. இருவரும் கூட்டாகச் சேர்ந்து பட நிறுவனத்தைத் தொடங்கினர். அப்போது அன்பு வளர்ந்து, அது திருமணத்தில் முடிந்தது.
 
இத்திருமணத்தினால் ஆரம்பத்தில் வருத்தம் கொண்டிருந்த மனைவி மீனாட்சி அம்மாள், பின்னர் எஸ்.டி.சுப்புலட்சுமியின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு, அவரை தன் தங்கையாகவே ஏற்றுக்கொண்டார். எனவே, கே.சுப்பிரமணியத்தின் இல்லற வாழ்க்கை சிறப்பானதாகவே அமைந்தது.
 
சுப்பிரமணியம் _ மீனாட்சி அம்மாள் தம்பதிகளுக்கு எஸ்.பாலகிருஷ்ணன், எஸ்.வி.ரமணன், டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி, சந்திரசேகர் என்ற நான்கு மகன்கள்; லலிதா, பாமா, நீலாயதாட்சி, பத்மா சுப்பிரமணியம் ஆகிய நான்கு மகள்கள்.
 
இவர்களில் ரமணன் "ஜெயஸ்ரீ பிக்சர்ஸ்" என்ற பட நிறுவனத்தை நடத்துகிறார். டெலிவிஷன் விளம்பரப்படங்களில் இவர் குரல் தினமும் ஒலிக்கிறது.
 
அமெரிக்காவில் படித்துப்பட்டம் பெற்ற டாக்டர் கிருஷ்ணசாமி, டாக்குமெண்டரி படங்களை தயாரிக்கும் "கிருஷ்ணசாமி அசோசியேட்" என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். "சிந்து சமவெளி முதல் இந்திரா காந்தி வரை" என்ற டாக்குமெண்டரி படத்தைத் தயாரித்து அகில இந்தியப்புகழ் பெற்றவர்.
 
சந்திரசேகர், கனடா நாட்டில் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வருகிறார். பத்மா சுப்பிரமணியம், புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடனக்கலை பற்றி ஆராய்ச்சி நடத்தி "டாக்டர்" பட்டம் பெற்றவர்.
 
சுப்பிரமணியம் எஸ்.டி.சுப்புலட்சுமியின் தம்பதிகளின் ஒரே புதல்வர். "அபஸ்வரம்" ராம்ஜி, இசைக்குழு நடத்தி புகழ் பெற்றவர். ஓட்டல் நிர்வாகக் கல்வியில் பயிற்சி பெற்று பட்டம் பெற்றவர்.
 
சுப்பிரமணியத்தின் முதல் மனைவி மீனாட்சி இசையிலும், வீணை முதலான இசைக் கருவிகளை வாசிப்பதிலும் வல்லவர். சில திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார்; இசை அமைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment