Thursday, August 20, 2009

"ரத்னகுமார்" பட அதிபருடன் சின்னப்பா மோதல்!

"ரத்னகுமார்" பட அதிபருடன் சின்னப்பா மோதல்!

 
"ரத்னகுமார்" படப்பிடிப்பின் போது பட அதிபருடன் சின்னப்பாவுக்கு மோதல் ஏற்பட்டது. கதாநாயகி பானுமதியுடனும் பிரச்சினை ஏற்பட்டது.  இதுபற்றி படத்தின் டைரக்டரான (கிருஷ்ணன்) பஞ்சு ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-
 
"அப்போது பி.யு.சின்னப்பா மிகப்பெரிய நடிகர். அவரைப் பற்றி பலர் பலவிதமாக பயங்கரமான கதைகளை பேசிக்கொண்டிருந்த நேரம். அவரிடம் நெருங்குவதற்கே எல்லோரும் பயப்படுவார்கள்.
 
"வேண்டாம்! அவரை ஒப்பந்தம் செய்யாதே! அந்த ஆள் மிகவும் முரடர்" என்னிடம் இப்படி பல பேர் பயமுறுத்தினார்கள்.இவ்வாறு மற்றவர்கள் சொல்லச் சொல்ல, எனக்கு அவரைப் போட்டுத்தான் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.
 
"மகாமாயா" படப்பிடிப்பிற்காக பி.யு.சின்னப்பா உள்ளே ஒப்பனை செய்து கொண்டு இருந்தார். நான் அவரைச் சந்திப்பதற்கு உள்ளே புகுந்தேன். "ஜாக்கிரதையாகப் போய்விட்டு, திரும்பி வா" என்று வெளியிலிருந்தவர்கள் எச்சரித்து அனுப்பினர்.எடுத்த எடுப்பிலேயே, சின்னப்பாவுக்கு என்னைப் பிடித்து விட்டது.
 
"நான் விவரம் புரியாதவர்களிடம்தான் கத்துவேன். விஷயம் புரிந்தவர்களிடம் அப்படிச் செய்ய மாட்டேன். என்னைப் பொறுத்த வரையில் நான் நல்லவனுக்கு நல்லவன். மனிதன் என்ற முறையில் நானும் தவறு செய்வேன். அந்த மாதிரி சமயங்களில், பின்னால் குறை கூறாமல், நேரடியாகச் சண்டை போட உங்களுக்கு உரிமை உண்டு.
 
இதைப் புரியாத டைரக்டர்கள் உங்களிடம் என்னைப் பற்றி ஏதேதோ சொல்லி அதிகமாக பயமுறுத்தியிருப்பார்கள். எங்கள் ஊர் டைரக்டர் ராஜா சாண்டோவுக்கு நீங்கள் ரொம்ப வேண்டியவர் என்பது எனக்குத் தெரியும். உங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகையால் உங்கள் மீது அன்பும், மதிப்பும் என்றும் இருக்கும்" என்று பி.யு.சின்னப்பா கனிவோடு கூறினார்.
 
இவ்வாறு சொன்னதுடன் மட்டுமின்றி, "ரத்னகுமார்" படம் முடியும் வரை மிகுந்த மரியாதையோடு ஒத்துழைப்பு தந்தார்.அவரது வார்த்தைகள் இன்னமும் எனது காதில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கின்றன.
 
"தவறான சிறு சொல் கூட என் கோபத்தைக் கிளப்பி விட்டு விடும். நான் அசல் தமிழன்! தமிழனுக்கு தன்மானம் அதிகம். ஆகவே எனக்கு கோபம் வருவதில் எந்த தவறும் இல்லை" இவ்வாறு சின்னப்பா அடிக்கடி கூறுவார்.
 
அவருடைய வெளிப்படையான பேச்சும், ஆழ்ந்த அன்பும் கடைசிவரை எங்களை இணைத்து வைத்தன. சின்னப்பா மிகப்பெரிய நடிகர் என்பதுதான் மக்களுக்குத் தெரியும். அவருடன் பழகிய எங்களைப் போன்றவர்களுக்குத் தான் அவரது பெருங்குணங்கள் தெரியும்.
 
எந்த தொழிலும் நுட்ப கலைஞனையும் தயாரிப்பாளர் மரியாதை இல்லாமல் நடத்துவது அவருக்கு பிடிக்காது. சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் உரிய மரியாதை கொடுக்கப்படவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார்.
 
"ரத்னகுமார்" படத்திற்கு கதை, வசனம் எழுதிய பழனி வேலாயுதம் என்பவர் திரையுலகத்திற்குப் புதியவர். நெல்லையைச் சேர்ந்த அவர், சினிமாவுக்கு எழுதி அனுபவமில்லாத புது எழுத்தாளர் என்பதனால் செட்டில் அடிக்கடி வசனங்கள் மாற்றப்படும்.
 
ஒரு நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் காதல் காட்சிகளில் கதாநாயகி கதாநாயகனை கேள்வி கேட்பது போலவும், அதற்கு கதாநாயகன் பதில் சொல்வது போலவும் எழுதுவது புதுமை! அது போன்ற உரையாடல் படமாக்கப்பட்டது.
 
"வாழ்க்கையில் மீண்டும் அடைய முடியாதது எது?" என்று கதாநாயகி கேட்பாள்.
 
"வாலிபப் பருவம்" என்று கதாநாயகன் சொல்வான்.
 
இந்த உரையாடல் படமாக்கப்பட்டது. நாங்கள் ஓகே சொல்லி விட்டோம்.
 
இதன் பிறகு தூரத்தில் நின்று கொண்டிருந்த முருகன் டாக்கீஸ் அதிபர் சீதாராமய்யர் என்பவர் "வாலிபப் பருவம் என்பதை சின்னப்பா சரியாகச் சொல்லவில்லை" என்று கத்தினார்.
 
அவர் சொல்கிறார், என்பதற்காக இரண்டாவது "டேக்" எடுத்தோம். "சரியில்லை" என்றார், பட அதிபர்.
 
சின்னப்பாவுக்கு கோபம் வந்துவிட்டது. "தலைவலி" என்று சொல்லிவிட்டு உடனே வீட்டுக்குப் போய்விட்டார். அவரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் அவருடைய வீட்டிற்குச் சென்றோம். மறுநாள் என்ன செய்வது என்பது பற்றி அவருடன் ஆலோசனை செய்தோம்.
 
"அந்த முதலாளியை காலையில் படப்பிடிப்புக்கு வரச்சொல்லுங்கள். காமிராவில் பிலிம் ஓட வேண்டாம். காலையிலிருந்து அந்த ஒரே வசனத்தையே திரும்பத் திரும்பச் சொல்லி அவரைத் திருத்துகிறேன்" என்று சின்னப்பா கூறினார்.
 
"என்ன நடக்கப்போகிறதோ" என்று சிறிது அச்சத்தோடு மறுநாள் காலையில் படப்பிடிப்பு அரங்கிற்குள் நுழைந்தேன். காலை 9 மணிக்கு சின்னப்பா வந்துவிட்டார். தயாரிப்பாளர் சீதாராமய்யரிடமும், ஒளிப்பதிவாளர் ஜித்தன் பானர்ஜியிடமும் வசனத்தை எப்படிச் சொல்வது என்று ஒரு மாணவன் ஆசிரியர்களிடம் பாடம் கேட்பதைப் போல் கேட்டு, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இது நீடித்தது.
 
நாங்கள் "போதும்" என்று சொன்ன பிறகுதான் அவர் விட்டார். இதுவரையில் அமைதியாக இருந்த சின்னப்பா, தயாரிப்பாளருக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.
 
"நானும், டைரக்டரும், மற்றவர்களும் தமிழர்கள். பட முதலாளியாகிய நீர் சவுராஷ்டிரர். காமிராமேன் பானர்ஜி, ஒரு வங்காளி, தமிழ் நடிகனாக எனக்கும், தமிழர்களாகிய மற்றவர்களுக்கும் தமிழ் சரியாக வரவில்லை என்று சவுராஷ்டிரராகிய நீரும், வங்காளக் காரரும் தமிழ் கற்றுத்தர வருகிறீர்கள். இதுபோல் இல்லாமல் இனிமேலாவது ஒழுங்காக இருந்தால்தான் உங்களுக்கு நல்லது" என்றார்.
 
அதன்பின்பு, இப்படிப்பட்ட நிலைமை ஏற்படவே இல்லை.
 
ஒருமுறை சின்னப்பா மது அருந்திவிட்டு, படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். நடித்துக்கொண்டிருக்கும்போது பானுமதிக்கு இது தெரிந்துவிட்டது. அவர் "தலை வலிக்கிறது" என்று சொல்லி விட்டு மேக்கப் அறைக்குச் சென்றார். அங்கிருந்தபடியே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டிற்குப் போய்விட்டார்.
 
சிறிது நேரம் சென்றபிறகுதான் பானுமதி வீட்டிற்கு சென்று விட்டார் என்பது எங்களுக்குத் தெரிந்தது.
 
"நான் குடித்திருப்பது தவறு என்றால், அதை என்னிடமே நேரில் சொல்லி இருக்கலாம். அப்படியில்லாமல் யாரிடமும் சொல்லாமல் இப்படிச் செல்லலாமா? இதுதான் மரியாதையா?" என்று சின்னப்பா கோபத்தோடு கேட்டார்.
 
நாங்கள் உடனே இதுபற்றி பானுமதியின் கணவருக்குத் தெரிவித்தோம். இந்த பிரச்சினை நல்ல முறையில் தீர்த்து வைக்கப்பட்டது.
 
எப்போதும் குடித்து விட்டு செட்டுக்கு வரும் சின்னப்பா, எங்கள் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கி அதன் பின்பு அரங்கில் குடிப்பதில்லை. புகை பிடிப்பது கூட இல்லை. இந்த வாக்குறுதியை அவர் கொடுத்தது மட்டுமின்றி, கடைசி வரையில் காப்பாற்றவும் செய்தார்."
 
இவ்வாறு டைரக்டர் பஞ்சு கூறியுள்ளார்.
 
"ரத்னகுமார்" படத்துக்கான விளம்பர நோட்டீசுகள், மதுரையில் விமானத்தில் இருந்து வீசப்பட்டன. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளிவந்த "ரத்னகுமார்" சரியாக ஓடவில்லை

No comments:

Post a Comment