Thursday, August 20, 2009

5 வேடங்களில் தோன்றினார் சின்னப்பா!

5 வேடங்களில் தோன்றினார் சின்னப்பா!
 
பி.யு.சின்னப்பாவின் திரையுலக வாழ்க்கையில், "ஜகதலப் பிரதாபன்" (1944) ஒரு மைல்கல் என்று சொல்லலாம். அவருடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்திய படம்.கர்ண பரம்பரையாக வழங்கி வரும் ராஜா _ ராணி கதை இது.
 
சித்ரா பவுர்ணமி தினத்தில், மன்னர் (பி.பி.ரங்காச்சாரி) தன் மகன்களை அழைத்து, "இந்த பூரண சந்திரனை பார்க்கும் போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்று கேட்கிறார். ஒவ்வொரு மகனும் பெற்றோரை புகழ்ந்து பேச, கடைசி மகன் பிரதாபன் (பி.யு. சின்னப்பா), "இந்த அழகிய சூழ்நிலையில் இந்திரகுமாரி, நாககுமாரி, வருணகுமாரி, அக்னி குமாரி ஆகியோர் இசை பாடியும், வெண்சாமரம் வீசியும், கால் அமுக்கியும் எனக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று கூறுகிறான்.
 
இதனால் கோபம் கொண்ட மன்னர், அவனை நாட்டை விட்டு வெளியேற்றுகிறார்.
 
பிரதாபன், தன் நண்பனுடன் (என்.எஸ்.கே.) சேர்ந்து, பல சோதனைகளைக் கடந்து, இந்திரகுமாரி, நாககுமாரி, வருணகுமாரி, அக்னிகுமாரி ஆகிய நால்வரையும் மணந்து, தான் சொன்னதை நிறைவேற்றிக் காட்டுகிறான்.
 
சின்னப்பாவின் ஜோடியாக எம்.எஸ்.சரோஜினி, .ஆர். ஜீவ ரத்தினம், எஸ்.வரலட்சுமி, டி.ஏ. ஜெயலட்சுமி ஆகியோர் நடித்தனர்.
 
கோவை பட்சிராஜா ஸ்டூடியோ தயாரித்த இந்தப் படத்தில் கத்திச் சண்டை, மல்யுத்தம் முதலிய காட்சிகளில் சின்னப்பா சிறப்பாக நடித்து, ரசிகர்களின் பாராட்டு தலைப் பெற்றார். மாயாஜாலக் காட்சிகள் நிறைய உண்டு.
 
டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு, படத்தை விறுவிறுப்பாக இயக்கி இருந்தார்.
 
"கிளைமாக்ஸ்" காட்சியில், சின்னப்பா ஒரு பாட்டுக்கச்சேரி நடத்துவார். இரு சின்னப்பாக்கள் பாட, மூன்று சின்னப்பாக்கள் பக்கவாத்தியங்களை வாசிப்பார்கள்! ஒரே சமயத்தில் ஐந்து சின்னப்பாக்களைக் கண்ட ரசிகர்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள்.
 
ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஓடிய சூப்பர் ஹிட் படம் இது. அந்தக் காலக்கட்டத்தில், படங்களின் வெற்றியை 50_வது நாள், 100_வது நாள் என்று குறிப்பிடுவதில்லை. வாரக் கணக்குத்தான்.)
 
இதற்குப்பின், டைரக்டர் கே.சுப்பிரமணியம் இயக்கிய "விகடயோகி" என்ற நகைச்சுவைப் படத்தில் சின்னப்பா நடித்தார். அவர் கதாநாயகனாக நடித்த முதல் சமூகப்படம் இது. இவருக்கு ஜோடி டி.ஆர்.ராஜகுமாரி.
 
இந்தப் படத்தின் மூலம்தான் பி.எஸ்.சரோஜா அறிமுகம் ஆனார். அவர் தன் காதலனுக்கு (எஸ்.எம்.குமரேசன்) எழுதும் காதல் கடிதம், தவறுதலாக முதலாளிக்கு (பி.யு.சின்னப்பா) போய் விடுகிறது. அது, தனக்கு எழுதப்பட்ட காதல் கடிதம் என்று சின்னப்பா நினைக்க, அதனால் ஏற்படும் குழப்பங்களை வைத்து, நகைச்சுவையாகக் கதை பின்னப்பட்டிருந்தது.
 
இந்தப் படத்தில் ஒரு புதுமை. இதில், எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது.
 
லட்சுமி காந்தன் வழக்கில் பாகவதர் சிறை செல்வதற்கு முன், அவரை வைத்து ஒரு படம் தயாரிக்க டைரக்டர் கே.சுப்பிரமணியம் திட்டமிட்டிருந்தார். "முகுந்தனே நந்தன் மைந்தனே" என்று தொடங்கும் பாடலை பாகவதர் பாட, அது ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
பாகவதர் சிறையில் இருந்த காலத்தில் வெளிவந்த "விகட யோகி"யில் அப்பாடலை இடம் பெறச்செய்ய சுப்பிரமணியம் விரும்பினார். அதற்காக ஒரு காட்சியை சிருஷ்டி செய்தார். குரலை மாற்றக்கூடிய மருந்தை, ஒரு விஞ்ஞானி கண்டுபிடிக்கிறார். அந்த மருந்துக்கு "அட்டா மிக் எசன்ஸ்" என்று பெயர்.
 
"பாகவதர்" என்று பெயர் எழுதப்பட்ட பாட்டிலில் உள்ள மருந்தைக் குடிக்கிறார், விஞ்ஞானி. அப்போது அவர் பாடும் பாட்டு _ பாகவதரின் "முகுந்தனே நந்தன் மைந்தனே" பாட்டு!
 
இதேபோல் வெவ்வேறு மருந்தைக் குடித்து, பேபி சரோஜா, எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் குரலில் பாடுகிறார்.இந்தக் காட்சியில் விஞ்ஞானியாக நடித்தவர், எஸ்.வி.சுப்பையா போன்ற தோற்றம் உடைய டி.கே.கோவிந்தன்.
 
"விகடயோகி"க்குப் பிறகு சின்னப்பா நடித்த "பங்கஜவல்லி" (1947) என்ற படம் சரியாக ஓடவில்லை. கிருஷ்ணபக்தி (1948) சுமாரான படம் என்றாலும், அதில் சின்னப்பாவின் "கதாகாலட்சேபம்" பிரமாதமாக அமைந்தது. 1949_ல் வெளிவந்த "மங்கையர்க்கரசி", குறிப்பிடத்தக்க படம்.
 
இதில் தாத்தா (தாடியுடன்) தந்தை (அரும்பு மீசை), பேரன் (மீசை இல்லாமல்) ஆகிய மூன்று வேடங்களில் சின்னப்பா நடித்தார். கண்ணாம்பா, அஞ்சலிதேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோர் உடன் நடித்தனர்.
 
படம் சூப்பர் ஹிட் படமாக அமையவில்லை என்றாலும், வெற்றிப்படம்தான். மாறுபட்ட மூன்று வேடங்களில் சின்னப்பா நடிப்பு பிரமாதம்.
 
பாகவதரை வைத்து "அசோக்குமார்" படத்தை எடுத்த முருகன் டாக்கீசார், சின்னப்பாவை வைத்து "ரத்னகுமார்" (1949) என்ற படத்தைத் தயாரித்தனர். இந்தப் படத்தில், சின்னப்பாவும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். மற்றும் எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர். படத்தை கிருஷ்ணன் _ பஞ்சு டைரக்ட் செய்தனர்.
 
பாழடைந்த சத்திரத்தில், தலையில் ஒரு கல்லுடன் பேய் (எலும்புக்கூடு வடிவில்) வசித்து வந்தது. அங்கு வந்து தங்குகிறவர்களிடம் "போடட்டுமா?" என்று பயங்கர குரலில் பேய் கேட்கும். எல்லோரும் பயந்து ஓடுவார்கள்.
 
நாடோடியான சின்னப்பா, "போட்டுத்தான் தொலையேன்" என்பார். பேய், கல்லைப் போட்டதும் அந்த இடம் அரண் மனையாக மாறும். சின்னப்பா அரசனாகி விடுவார். பானுமதியை கைவிட்டு, அரசகுமாரியை காதலிப்பார். அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் கழன்று விழ, மீண்டும் ஆண்டி யாகி விடுவார்... இப்படி செல்லும் மாயாஜாலக்கதை "ரத்னகுமார்."

No comments:

Post a Comment