எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த முதல் படம் "சேவா சதனம்"!

டைரக்டர் கே.சுப்பிரமணியம் இயக்கி, எம்.எஸ். நடித்த முதல் படத்தின் பெயர் "சேவாசதனம்." பிரபல இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த் எழுதிய கதை. வயோதிகத் திருமணத்தைக் கண்டிக்கும் புரட்சிகரமான கதை அமைப்பைக் கொண்டது. அதில், எம்.எஸ்.சின் வயோதிகக் கணவராக திருச்சியைச் சேர்ந்த ரெயில்வே அதிகாரியும், புகழ் பெற்ற "அமெச்சூர்" நடிகருமான எப்.ஜி.நடேசய்யர் நடித்தார்.
1938_ம் ஆண்டு வெளியான "சேவாசதனம்" அமோக வெற்றி பெற்றது. "கோகிலகான இசை வாணி" என்ற அடைமொழியுடன் எம்.எஸ்.சுப்புலட்சுமி அறிமுகமானார். எம்.எஸ். பாடிய பாடல்கள் இசைத்தட்டுகளாக வந்து சக்கை போடு போட்டன. "மா ரமணன் உமா ரமணன்", "குக சரவண பவ", "சியாம சுந்தர", "ஆதரவற்ற வர்க்கெல்லம்", "நீது சரண" முதலான பாடல்கள் மக்கள் இதயங்களில் ரீங்காரமிட்டன.
படத்தில் சமுதாய முன்னேற்ற கருத்துக்களும், வசனங்களும் இடம் பெற்றிருந்தன. ஒரு கட்டத்தில், மனம் திருந்திய எப்.ஜி.நடேசய்யர் (வயோதிகக் கணவராக நடித்தவர்) தன் பூணூலை அறுத்தெறிவார். இக்காட்சி, பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
"சேவாசதன"த்தின் வெற்றியைத் தொடர்ந்து, படத்தில் நடிக்க சுப்புலட்சுமிக்கு ஏராளமான அழைப்புகள் வந்தன. ஆனால், "தரமான படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும்" என்று முடிவு செய்திருந்த எம்.எஸ்., மதுரை ராயல் டாக்கீசார் ("சிந்தாமணி" படத்தை தயாரித்தவர்கள். பிறகு "ஹரிதாஸ்" படத்தை எடுத்தவர்கள்) தயாரிப்பில் "சகுந்தலை" படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்தப்படம், அமோக வெற்றி பெற்றது. அமெரிக்கரான டைரக்டர் எல்லிஸ் ஆர்.டங்கன் "சகுந்தலை"யை ஒரு காவியமாக உருவாக்கியிருந்தார். எம்.எஸ்.பாடிய "ஆனந்தம் என் சொல்வேனே", "எங்கும் நிறை நாத பிரம்மம்" எந்தனிடது தோளும்" முதலான பாடல்கள் பெரும் புகழ் பெற்றன.
இப்படத்தில் எம்.எஸ். சுக்கு இணையாக (துஷ்யந்தனாக) நடித்தவர் ஜி.என்.பாலசுப்பிரணியம். சங்கீதமேதை. அந்தக் காலத்திலேயே பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றவர்.
இவ்வளவு இருந்தும் என்ன! தோற்றத்திலும், இசையிலும் எம்.எஸ். சுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவை மிகப்பிரமாதமாக அமைந்தது.
இக்காலக்கட்டத்தில், தேனினும் இனிய குரல் வளம் பெற்றிருந்த ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர், தென்னிந்திய பட உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து கொண்டிருந்தார். அவருக்கு இணையாகப் பாடக்கூடிய சங்கீத ஞானமோ, குரல் வளமோ அன்றைய நடிகைகள் எவருக்கும் இல்லை.
இந்நிலையில், தோற்றம், சங்கீத ஞானம், குரல் இனிமை மூன்றிலும் பாகவதருக்கு சமமான நட்சத்திரமாக உதயமானார், எம்.எஸ். "பாகவதரையும், எம்.எஸ்.சையும் ஒன்றாக நடிக்க வைத்து, ஒரு மாபெரும் இசைச்சித்திரத்தை உருவாக்க வேண்டும்" என்று சில முக்கிய பட அதிபர்கள் விரும்பினார்கள். ஆனால் எம்.எஸ். வாழ்க்கையில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டு, "இனி படங்களில் நடிக்கமாட்டேன்" என்று அறிவித்தார்.
இந்த முடிவை அவர் எடுப்பதற்கு சரியான காரணம் இருந்தது. எம்.எஸ். குடும்பத்துக்குத் துணையாகவும், உதவியாகவும் இருந்த டி.சதாசிவம், எம்.எஸ்.சை இசைத்துறையில் மகோன்னத நிலைக்குக் கொண்டு செல்ல விரும்பினார். அவருக்கு துணைவராக மட்டுமல்ல, வாழ்க்கைத் துணைவராகவும் ஆக விரும்பினார். இதை, "வீணை" சண்முகவடிவு அம்மாளிடமும், சுப்புலட்சுமியிடமும் தெரிவித்தார்.
சதாசிவத்தின் ஆற்றல், நற்பண்புகள் ஆகியவற்றால் ஏற்கனவே அவர் பால் ஈர்க்கப்பட்டிருந்த எம்.எஸ். தன் சம்மதத்தை தெரிவித்தார். சண்முகவடிவும் தன் மகளின் எதிர்காலம் பற்றி இனி கவலை இல்லை என்ற முடிவுடன், திருமணத்துக்கு ஆசி வழங்கினார்.
சென்னையை அடுத்த திருநீர்மலையில், 1940_ம் ஆண்டு ஜுலை 10_ந்தேதி எம்.எஸ்.சுப்புலட்சுமி _ சதாசிவம் திருமணம் எளிய முறையில் நடந்தேறியது. சதாசிவம் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை இழந்தவர். ராதா, விஜயா என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த இரண்டு குழந்தைகளையும் தன் குழந்தைகளாக வளர்த்தார், எம்.எஸ். (பிற்காலத்தில் "மீரா"வில் பால மீராவாக நடித்த ராதா, கச்சேரிகளில் எம்.எஸ்.சுடன் இணைந்து பாடினார்).
திருமணத்துக்குப்பின் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்தார் எம்.எஸ். ஆனால் அதில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் பிறகு ஏற்பட்டது. ஜெமினி எஸ்.எஸ்.வாசன் நடத்தி வந்த "ஆனந்த விகடன்" பத்திரிகையின் ஆசிரியராக "கல்கி" ரா.கிருஷ்ணமூர்த்தியும், விளம்பர மானேஜராக சதா சிவமும் பணியாற்றி வந்தார்கள். இருவரும் நண்பர்கள்.
மகாத்மா காந்தியின் "தனி நபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக "விகடன்" ஆசிரியர் பதவியை கல்கி ராஜினாமா செய்தார். சதா சிவமும் விலகினார். நண்பர்கள் இருவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றனர்.
விடுதலையான பிறகு, "கல்கி" என்ற பெயரிலேயே பத்திரிகை தொடங்க வேண்டும் என்று சிறையிலிருந்தபோதோ முடிவு செய்தார்கள். அதன்படி சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, பத்திரிகை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மூலதனம் திரட்டுவது மிகவும் சிரமமாக இருந்தது.
இந்த சமயத்தில் "சகுந்தலை" படத்தைத் தயாரித்த ராயல் டாக்கீசார், "சாவித்திரி" என்ற படத்தைத் தயாரிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். படத்தின் கதாநாயகியாக _ சகுந்தலையாக நடிக்க ஏற்கனவே இந்தி, மராத்தி மொழிப் படங்களில் நடித்து அகில இந்தியப் புகழ் பெற்றிருந்த நடிகை சாந்தா ஆப்தே ஒப்பந்தம் ஆகி இருந்தார். சத்தியவானாக நடிக்கவும், டைரக்ட் செய்யவும் ஒய்.வி.ராவ் (நடிகை லட்சுமியின் அப்பா) ஒப்புக்கொண்டிருந்தார்.
நாரதர் வேடத்தில் எம்.எஸ். நடிக்க வேண்டும் என்றும், அதற்கு சம்பளம் 40 ஆயிரம் என்றும் ராயல் டாக்கீசார் அழைத்தார்கள். "ஆண் வேடத்தில் நடிப்பதா?" என்று முதலில் எம்.எஸ். தயங்கினாலும், "கல்கி" பத்திரிகைக்கு மூலதனம் தேவைப்பட்டதால் நாரதராக நடிக்க சம்மதித்தார்.
"சாவித்திரி" படமும் அமோக வெற்றி பெற்றது. அதில் எம். எஸ்.பாடிய "ப்ருஹி முகுந் தேகி", "தேவியை பூஜை செய்வாய்", "சொல்லு நீ குழந்தாய்" முதலிய பாடல்கள் திக்கெட்டும் எதிரொலித்தன. இந்தப் படத்தில் நடித்ததற்காக, தனக்குக் கிடைத்த ரூ.40 ஆயிரத்தை "கல்கி" பத்திரிகை தொடங்க கணவரிடம் கொடுத்துவிட்டார் எம்.எஸ். அந்த அஸ்திவாரத்தின் மீது எழுந்ததுதான் "கல்கி" பத்திரிகை.
No comments:
Post a Comment