Thursday, August 20, 2009

10 வயதில் இசைத்தட்டில் பாடிய எம்.எஸ்.சுப்புலட்சுமி சினிமா - நட்சத்திரம் ஆனார்

10 வயதில் இசைத்தட்டில் பாடிய எம்.எஸ்.சுப்புலட்சுமி சினிமா - நட்சத்திரம் ஆனார்

 
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் நடைபெறுகிறது அல்லவா? மகாமகத்தின்போது, பெரிய பொருட்காட்சியும் நடைபெறுவது வழக்கம். பொருட்காட்சியில் பாட்டுக்கச்சேரி, நாடகம் முதலான கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
 
கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பை, டைரக்டர் கே.சுப்பிரமணியம் ஏற்றிருந்தார். மதுரையைச் சேர்ந்த ஒரு இளம் பாடகியை தனக்குத் தெரியும் என்றும் நல்ல குரல் வளம் படைத்த அந்தப் பாடகிக்கு கலை நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்ப்பு அளிக்குமாறும், சுப்பிரமணியத்திடம் எஸ்.டி.சுப்புலட்சுமி கேட்டுக்கொண்டார்.
 
அதன்படி அந்தப் பாடகிக்கு வாய்ப்பளித்தார், கே.சுப்பிரமணியம். மேடையில் மிக இளம் வயது பாடகி வந்து உட்கார்ந்தபோது, கூட்டத்தினர் இடையே பெரும் ஏமாற்றம். "இந்தச் சின்னப் பெண் எப்படி சிறப்பாக கச்சேரி நடத்தமுடியும்?" என்று அலட்சியமாக அமர்ந்திருந்தனர்.
இளம் பாடகி பாட ஆரம்பித்தார். கூட்டத்தினர் நிமிர்ந்து உட்கார்ந்தனர். "ஆகா! எவ்வளவு இனிமையான குரல்! சிரமமான கர்நாடக இசைப் பாடல்களை எவ்வளவு சரளமாகப் பாடுகிறார்!" என்று வியந்தனர். ஒவ்வொரு பாடல் முடிவிலும், கைதட்டல் விண்ணை எட்டியது.
 
அந்த இளம் பாடகிதான் பிற்காலத்தில் இசையில் உலகப் புகழ் பெற்ற "பாரத ரத்னா" எம்.எஸ்.சுப்புலட்சுமி. மதுரையில் வாழ்ந்த வீணை இசை மேதை சண்முகவடிவு அம்மையாரின் மகள்தான் சுப்புலட்சுமி. தந்தை பெயர் சுப்பிரமணிய அய்யர். பிரபல வக்கீல். சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு உடைய அவர், சண்முகவடிவின் வீணைக் கச்சேரியைக் கேட்டு மனதைப் பறிகொடுத்து, அவர் வாழ்க்கையிலும் இணைந்தார்.
 
இந்தத் தம்பதிகளின் மகளாய் 1916_ம் ஆண்டு செப்டம்பர் 16_ந்தேதி பிறந்தார், சுப்புலட்சுமி. தமிழில் புரட்டாசி மாதம் பரணி நட்சத்திரத்தில். "பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள்" என்று கூறுவார்கள் அல்லவா? "என் மகள் தரணியை ஆளாவிட்டாலும் இசை உலகில் அரசியாய் திகழ்வாள்" என்று நினைத்தார், சண்முகவடிவு. ஏனென்றால், அத்தகைய அற்புதமான இனிய குரலை எம்.எஸ்.சுக்கு இறைவன் அருளி இருந்தான்.
 
சிறுவயதில் "குஞ்சம்மா" என்ற செல்லப்பெயரில் அழைக்கப்பட்ட சுப்புலட்சுமி, தாயாரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றுக் கொண்டார். என்றாலும், மதுரையில் அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய சீனிவாச அய்யங்காரிடம் முறையான சங்கீதப் பயிற்சியைப் பெற்றார்.
அக்காலகட்டத்தில், தாயார் வீணைக் கச்சேரி செய்யும்போது, சுப்புலட்சுமி கூடவே பாடுவது உண்டு. எம்.எஸ்.சின் அண்ணன் பெயர் சக்திவேல். தங்கை வடிவாம்பாள். சக்திவேல் மிருதங்கம் வாசிப்பதில் நிபுணர். வடிவாம்பாளுக்கு நன்றாக வயலின் வாசிக்கத் தெரியும்.
 
அண்ணன் மிருதங்கம் வாசிக்க, தங்கை வயலின் இசைக்க வீட்டிலேயே சுப்புலட்சுமி "குட்டி இசைக்கச்சேரி"கள் நிகழ்த்துவது உண்டு. இந்நிலையில் எம்.எஸ்.சுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதாகும்போது, மதுரை சேதுபதி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியின்போது, எம்.எஸ்.தனியே அமர்ந்து தனது கச்சேரியை நடத்தினார். அதைத்தான் அவரது "அரங்கேற்றம்" என்று கூறவேண்டும்.
 
அப்போதுதான் கிராம போன் ரிக்கார்டுகள் வெளி வரத்தொடங்கிய காலம். தன் மகளின் பாடல்கள் கிராம போன் ரிக்கார்டுகளாக வரவேண்டும் என்று விரும்பினார், சண்முக வடிவு. எம்.எஸ்.சை சென்னைக்கு அழைத்துச் சென்றார். சிறுமி சுப்புலட்சுமியைப் பார்த்த இசைத்தட்டுக் கம்பெனிக்காரர்கள், "இந்த சின்னப் பெண்ணால் என்ன பாடிவிட முடியும்!" என்று நினைத்தார்கள். ஆனால் "மரகதவடிவும், செங்கதிர் வேலும்" என்ற முருகன் பாடலையும், "விதிபோலுமிந்த" என்ற திருப்புகழ் பாடலையும் எம்.எஸ். பாட, கிராம போன் கம்பெனியார் அப்படியே அசந்து போய்விட்டார்கள்.
 
உடனே பாடல்கள் பதிவாகி, இசைத்தட்டு வெளிவந்தது. வந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்துவிட்டது. அக்காலத்தில் பத்து வயதிலேயே இசைத்தட்டு மூலம் புகழ் பெற்றவர், அகில இந்தியாவிலும் எம்.எஸ். ஒருவரே.
 
எம்.எஸ். புகழ் திக்கெல்லாம் பரவியது. அவருடைய 14_வது வயதில், மதுரையில் முதல் இசைக்கச்சேரி நடை பெற்றது. தொடர்ந்து திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம், செட்டிநாடு என்று பல ஊர்களில் அவருடைய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 
10 வயதிலேயே எம்.எஸ்.சின் இசைத்தட்டை வெளியிட்ட கிராம போன் கம்பெனியார், அவர் மேடைக் கச்சேரிகளில் புகழ் பெற்று வருவதை அறிந்து மகிழ்ந்தார்கள். கச்சேரிப் பாடல்களையும் இசைத் தட்டுகளாக வெளியிடத் தொடங்கினார்கள்.
 
"நகுமோ", "இனி என்ன பேச்சு" என்ற கச்சேரிப் பாடல்கள் இசைத்தட்டுகளாக வெளிவந்து, சக்கை போடு போட்டன."சங்கீதத்தில் நாம் இன்னும் முன்னேற வேண்டும்; நம் சங்கீத ஞானத்தை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்" என்று விரும்பிய எம்.எஸ். அக்காலத்தில் மிகப்பெரும் சங்கீத வித்வான்களாக விளங்கிய அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மழவராய நேந்தல் சுப்பராம பாகவதர் ஆகியோரிடம் சங்கீத Žட்பங்களை கற்றறிந்தார்.
 
1932 ஜனவரி 1_ந்தேதி. சென்னை சங்கீத வித்வத் சபையில் (மிžசிக் அகடமி) அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், உடல் நலம் இல்லாததால் அன்று அவரால் பாட இயலவில்லை.
 
சுப்புலட்சுமியின் புகழ் உயர்ந்து கொண்டிருந்த காலம். எனவே, அரியக்குடிக்கு பதிலாக, "எம்.எஸ்."சை பாட அழைத்து வந்தார்கள், சபா நிர்வாகிகள். "அரியக்குடிக்கு பதிலாக இந்த சின்னப் பெண்ணா பாடப்போகிறாள்!" என்று சாதாரணமாக நினைத்தவர்கள் கூட, பிரமிக்கும்படி அன்று எம்.எஸ். பாடினார்.
 
அன்று கச்சேரிக்கு வந்திருந்த "சங்கீத சிம்மம்" செம்பை வைத்தியநாத பாகவதர், "ஆகா! சங்கீதத்தில் எவ்வளவு ஞானம்! குரலில் எத்தகைய இனிமை!" என்று வியந்தார்.
 
அதுவரை மதுரையில் இருந்த எம்.எஸ்.சின் குடும்பம், சென்னைக்குக் குடியேறியது. புரசைவாக்கம் டாணாத் தெருவில்தான் வீடு. அப்போது, எம்.எஸ். குடும்பத்துக்கு டி.சதாசிவம் அறிமுகமானார். சதாசிவம் அப்போது ஆனந்த விகடனில் விளம்பர மானேஜராகப் பணியாற்றி வந்தார். எம்.எஸ். இசை உலகில் மேலும் மேலும் முன்னேற உறுதுணையாக இருந்தார்.
 
இந்த சந்தர்ப்பத்தில்தான், கும்பகோணம் மகாமக கலை விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கச்சேரி செய்து, பெரும் பாராட்டுதலைப் பெற்றார். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை ஞானமும், குரல் வளமும் டைரக்டர் சுப்பிரமணியத்துக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. எம்.கே.தியாகராஜ பாகவதரையும், எஸ்.டி.சுப்புலட்சுமியையும் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தியதுபோல், எம்.எஸ்.சுப்புலட்சுமியையும் திரைப்பட நட்சத்திரமாக பிரகாசிக்கச் செய்ய விரும்பினார்.
 
மதுரைக்குச் சென்று, "வீணை" சண்முகவடிவை சந்தித்துப்பேசினார். அவர் முதலில் தயங்கினார். "திரைப்படங்களில் நடிப்பதில் எந்த தவறும் இல்லை. அதன் மூலம், புகழும், பொருளும் பெறலாம்" என்று சண்முகவடிவு, சுப்புலட்சுமி ஆகியோரிடம் எடுத்துச் சொன்னார்.
 

No comments:

Post a Comment