பி.யு.சின்னப்பாவின் காதல் மனைவி சகுந்தலா

1942_ல் வெளிவந்த "பிருதிவிராஜன்" என்ற படத்தில் சின்னப்பா பிருதிவிராஜனாகவும், ஏ.சகுந்தலா சம்யுக் தையாகவும் நடித்தனர்.
ஏ.சகுந்தலா நல்ல அழகி. எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த "சகுந்தலை" படத்தில், தோழிகளில் ஒருவராக நடித்தவர்.)சின்னப்பாவுக்கும், சகுந்தலாவுக்கும் காதல் ஏற்பட்டது.
சம்யுக்தையை பிருதிவிராஜன் குதிரையில் தூக்கிச் சென்றது போல், சகுந்தலாவை சின்னப்பா காரில் கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டார். இவர்களின் பதிவுத்திருமணம் 5_7_44_ல் நடைபெற்றது.
திருமணத்துக்குப்பிறகு சகுந்தலா படங்களில் நடிக்கவில்லை. இந்த காதல் தம்பதிகளுக்கு ஒரே மகன். பெயர் ராஜாபகதூர்.
சின்னப்பாவுக்கு நிறைய சொத்துக்கள் இருந்தபோதிலும், அவர் திடீர் என்று இறந்து விட்டதால், பெரும்பாலான சொத்துக்கள் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
எனினும், சென்னை திருவல்லிக்கேணியில் 13 வீடுகள் கொண்ட ஒரு இடம் ("காம்ப்ளக்ஸ்") சகுந்தலாவிடம் இருந்தது. ஒரு வீட்டில் தன் மகனுடன் வசித்துக்கொண்டு, மீதி வீடுகளின் வாடகை வருமானத்தின் மூலம் குடும்பத்தை நடத்தி வந்தார்.
ராஜாபகதூருக்கு 10 வயதானபோது, சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்த "வாழவைத்த தெய்வம்" என்ற படத்தில், கண்ணாம்பாவின் மகனாக (ஜெமினி கணேசனின் தம்பியாக) நடித்தார்.
ராஜாபகதூருக்கு 10 வயதானபோது, சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்த "வாழவைத்த தெய்வம்" என்ற படத்தில், கண்ணாம்பாவின் மகனாக (ஜெமினி கணேசனின் தம்பியாக) நடித்தார்.
பின்னர், "கோவில் புறா" என்ற படத்தில் குணச்சித்திர வேடத்தில், நாதசுரவித்வானாக நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த "தியாகி", ராமராஜன் நடித்த "கரகாட்டக்காரன்" உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தார். அதன்பின், நடிகர்களுக்கு குரல் கொடுத்தார்.
தன் அத்தையின் (சின்னப்பாவின் சகோதரி) மகள்கள் இருவரையும் மணந்து கொண்டார். நாளடைவில், திருவல்லிக்கேணியில் இருந்த 13 வீடுகளையும் விற்று விட்டு, சின்மயா நகரில் ஒரு சிறு வீட்டில் சகுந்தலா குடியேற நேரிட்டது.
அவர் பத்திரமாகக் காப்பாற்றி வந்த ஒரே ஒரு சொத்து சின்னப்பாவின் புகைப்படம் தான். மழை பெய்யும்போது வீடு ஒழுகும். படம் நனைந்து விடக்கூடாது என்று, ஒரு தகரப்பெட்டியில் படத்தை மூடி வைத்து விடுவார்.
தமிழ்ப்பட உலகின் இரண்டாவது சூப்பர் ஸ்டாரின் அழகு மனைவி, கடைசி காலத்தில் வறுமையில் உழன்று ஒரு நாள் காலமானார்.
வாழ்க்கையில் சந்தித்த துயரங்களில் விரக்தி அடைந்த மகன் ராஜாபகதூர், துயரத்தை மறக்க குடிக்கத் தொடங்கி, இறுதியில் மதுவுக்கு அடிமையானார். உடல் நலம் சீர்கேடு அடைந்து, திடீரென்று மரணம் அடைந்தார். இதுபற்றி பட அதிபர் ஒருவர் கூறுகையில், "சினிமா உலகில் பெயரும், புகழும் பெற்று விளங்கியவர்களில் முக்கால்வாசி பேர், கடைசி காலத்தை வறுமையில்தான் கழித்திருக்கிறார்கள். இது ஒரு சாபக்கேடு. சின்னப்பா சிக்கனமாக வாழ்ந்தார். ஏராளமான வீடுகள் வாங்கினார். ஆனால், இளம் வயதிலேயே மரணம் அடைந்தார். அவருடைய மனைவியும், ஒரே மகனும் வறுமையில் வாட நேர்ந்ததை, "விதி" என்றுதான் கூறவேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment