![]() டி.பி. ராஜலட்ஷ்மி, இன்றைய அசின், த்ரிஷாவுக்கெல்லாம் மூத்தார். 'காளிதாஸி'ன் நாயகி. 'மிஸ் கமலா'வை (1936) இயக்கியதால் பெண் இயக்குனர்களுக்கும் இவரே முதல்வர். ஸ்டுடியோ தொடங்கிய முதல் தமிழர் நாராயணனின் ஸ்ரீனிவாசா சினிடோன் ஸ்டுடியோவின் (தோற்றம் 1934) ஒலிப்பதிவாளர் திருமதி நாராயணனான மீனாட்சி. வாழ்க்கையுடன் வேலையையும் பகிர்ந்து கொண்ட சம்சார சோஷலிஸ்ட். பாட்டாலே பார்வையாளர்களை சம்பாதித்த தியாகராஜ பாகவதருக்கு பக்தர்களைவிட பக்தைகள் அதிகம். இசைக்கு வசப்படார் பாகவதரின் தோளில் புரளும் சிகைக்கு வசப்பட்டார். மூன்று தீபாவளி கண்ட 'ஹாரிதாஸ்' இவரது மகுடம். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தின் பிள்ளையார் சுழி. பத்திரிகையாளர் லட்சுமிகாந்தின் கொலை வழக்கில் சிறை சென்று புகழ், பொருளுடன் முகமும் இழந்த ராசியில்லா ராஜா. பாகவதரை மறந்த உலகம் அவரது 'மன்மதலீலையை வென்றார் உண்டோ...' வை மறக்கவில்லை. பாகவதரை சொல்லும்போது பாரதி பாடலை திரையில் முதலில் பயன்படுத்திய பி.யு. சின்னப்பாவை சொல்லாமல் விட முடியுமா? அழகுக்காக திரையில் தோன்றியவர்கள் மத்தியில் குரலுக்காக கொண்டாடப்பட்டவர் கே.பி. சுந்தராம்பாள். 'நந்தனாரி'ல் லட்சம் பார்த்த முதல் லட்சாதிபதி. படத்துக்கு நாற்பது பாடல்களுடன் புராண சாலையில் மயங்கிக் கிடந்த சினிமாவை, வசன வடம் கொண்டு சமூக வீதிக்கு இழுத்து வந்த அண்ணாவின் 'வேலைக்காரி'யும் கருணாநிதியின் 'பராசக்தி'யும் தமிழ் சினிமா வரலாற்றில் திருப்புமுனைகள். சாதித்தது அவர்தம் பேனா முனைகள். 'பராசக்தி' தந்த இன்னொரு வரம், சிவாஜி கணேசன். தமிழ் கடவுளுக்கு ஆறு முகம். திரையில் இந்த தமிழ் நடிகனுக்கு நூறு முகம். சிரிப்பும் சிந்தனையும் தந்த என்.எஸ். கே. நகைச்சுவையில் ஒரு மைல் கல் என்றால் வைரகல் சந்திரபாபு. நாகேசுக்கும் உண்டு நல்லதொரு இடம். பாலையா போலிங்கு யாரையா? மதுரகவி பாஸ்கரதாஸ், உடுமலை நாராயணகவி, பாபநாசம் சிவன் என தொடங்கி கோப்பையில் குடியிருந்த கண்ணதாசன், திருடராய் பார்த்து திருந்தச் சொன்ன கல்யாண சுந்தரம் என பெரு வெள்ளம் நம் சினிமா கவி வெள்ளம். |
![]() கே.பி.யின் 'அரங்கேற்றம்', பீம்சிங்கின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', ஜான் ஆபிரஹாமின் 'அக்ரஹாரத்தில் கழுதை', ருத்ராய்யாவின் 'அவள் அப்படிதான்' காமிரா கவிஞரின் 'அழியாத கோலங்கள்' என்றும் அழியா காவியங்கள். இத்தனையும் ஜரோப்பிய அலையில் விளைந்த நல்மணிகள். கலை வழி சென்ற சினிமாவை கமர்ஷியல் விழலுக்கு திருப்பிய பெருமை (?) ஏ.வி.எம். முக்கு உண்டு. இவர்களது 'முரட்டு காளை'யும், 'சகலகலா வல்லவனும்' சினிமா கலையின் முட்டுச் சந்து. திராவிட விழுமியங்களை விழுங்கி தேசியத்தை சினிமாவில் பூசியதில் மனிரத்னத்தின் 'ரோஜா'வுக்கும் 'பாம்பே'க்கும் பெரும் பங்கு உண்டு. வியாபார எல்லைகளை விஸ்தரித்தவையும் இவையே! எடுத்து இயம்ப இன்னும் பல பேர் உண்டு. எனினும் உலகத் தரத்தில் எடுத்துச் சொல்ல இங்கு என்ன உண்டு? கேன்ஸ் சென்றதில்லை, ஆஸ்கார் வென்றதில்லை, 'லகான்', 'சக் தே' போலொரு முயற்சியில்லை. இனிவரும் ஆண்டுகளில் குறைகளை நிறைகளாக்கி தனது முகத்தை புதுப்பித்துக் கொள்ளுமா தமிழ் சினிமா? நம்பியார் இல்லாமல் நல்லவராக இயலாத நடிகர்கள் நடுவில், கெட்டவனாக வந்தே ஹீரோவான 'ரத்தக் கண்ணீர்' ராதா, சிந்தனையில் தீ மூட்டிய நடிகவேள். விலங்குகளை மனிதர்கள் போல் நடிக்க வைத்த சாண்டோ சின்னப்ப தேவர்., ஜகன் மோகினிகளை திரையில் உலவவிட்ட, இன்றைய கிராபிக்ஸ் ஜாம்பவான்கள் வெங்கிகளுக்கெல்லாம் முன்னோடி விட்டாலாச்சாரியார் என எத்திசை நோக்கிலும் நம்மிடம் உண்டு ஒரு வல்லவர். தென்னாட்டு ஜேம்ஸ் பாண்டாக 'வல்லவன் ஒருவன்' ஜெய்சங்கரும் உண்டு. |
Tuesday, August 18, 2009
தமிழ் சினிமா 75
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment